Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Tuesday, September 05, 2017

மதன்-1

1994


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிய கூட்டத்தில் நானும் ஒருவன். மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் தேர்வு மூலம் விடிவு பிறந்து காரைக்குடியில் ஆகஸ்டு மாதத்தில் காலடி எடுத்து வைத்தேன். மொத்தமே 34 இடங்கள் தான். அதிலே நான் உள்பட 33 பேர் வந்து சேர்ந்தனர் (2 பெண்கள்). ஒருவன் உடல்நிலை சரி இல்லாமல் பின்னாளில் வந்து சேர்ந்தான்.
பணத்தைக் கட்டி சேர்ந்தாயிற்று. இனி கல்லூரி விடுதியில் தான் வாசம் என்று தெரிந்தது. 3 ஆம் எண் அறை ஒதுக்கப் பட்டு இருந்தது. வாழத் தேவையான சாமான்களுடன் என் தந்தையோடு அந்த விடுதி அறைக்குச் சென்றேன். விடுதி வசதியானதாகவே இருந்தது. மொத்தம் 40+ அறைகள். 3 அறைகளைத் தவிர மற்றவை எல்லாம் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்தது. இந்த மூன்று அறைகளில் ஒன்றாய் என் அறை. சட்டி பெட்டிகளுடன் போய் நின்றால், சற்றே உயரமான ஒரு 25 வயது சொல்லத்தக்க சரண்ராஜ் போன்ற ஒருவர் தென்பட்டார். விடுதியில் வேலை செய்பவர் ஆக இருக்கும் என்று நினைத்து:
“சார், இந்த 3 ஆம் நம்பர் ரூம் கீ யார் கிட்ட வாங்கிக்கலாம் ?”
என்று என் தந்தை கேட்டார். மேலும் கீழும் பார்த்த அவர், “ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷனா ?” என்றார். என் தந்தை ஆம் எனத் தலையாட்ட, “அந்த ரூம் கீ என்கிட்ட தான் இருக்கு அங்கிள். என்னை சார்னு எல்லாம் சொல்லாதீங்க” என்றார் /றான்.
“அப்படியா தம்பி உங்க பேர் ?”
“மதன்ராஜ்”
“தம்பி என்ன பண்றிங்க ?”
”நானும் ஃபர்ஸ்ட் இயர் தான். இதே ரூம் தான்”
இப்படித்தான் அறிமுகமானான் மதன். நான் அவனை நம்ப முடியாமல் மேலும் கீழும் பார்த்தேன். 5-7 உயரத்தில், அடர்த்தி இல்லை என்றாலும் அரும்பு மீசை இல்லை என்று பெருமைப் பட்டுக்கொள்ளக்கூடிய அளவில் இருந்த நான் எங்கே ? தினம் சவரம் செய்யாவிட்டால் காடாகக் காட்சி அளிக்கக்கூடிய அளவுக்கு மீசையும் தாடியும் 5-11 உயரமும் கொண்ட இவன் எங்கே ? இவனா என் அறைத்தோழன் ? நடிகர் சரண்ராஜே நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு பிரமை.
பெட்டி படுக்கைகளுடன் உள்ளே புகுந்தேன். தந்தை விடை வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றார்.
“டேய்..எங்கடா படிச்சே ?”
அவனின் குரலில் அதற்குள்ளேயே ஒரு அன்னியோன்னிய உரிமையுடன் கூடிய தொனி.
“மட்ராசிலே டீ யே வீ…நீ?”
“நான் மதுரை டி வி யெஸ். ஆனா இதுக்கு முன்னாடி ஹிந்துஸ்தான் காலேஜிலே 1 வர்ஷம் படிச்சேன்..ஆமா ராகிங் இங்கே எப்படி இருக்கும்னு ஐடியா இருக்கா ?”
ராகிங்கைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டதோடு சரி. இங்கே அதெல்லாம் கிடையாது என்று பெரிய பில்டப் கொடுத்து என்னை (ஏமாற்றி) இங்கே சேர வைத்த பெருமை இன்னொரு சீனியரைச் சாரும். மதன் அப்படிக் கேட்டவுடன் நான்:
“இங்கே அப்படி ஒண்ணும் இல்லைன்னு சொன்னாங்களே” என்றேன் பரிதாபமாக.
“எவண்டா சொன்னான் ? 4th year ல மாஸ்டர் ராகர்னு ஒரு சீனியர் இருக்கானாம். அவன்கிட்ட மாட்டினா செத்தோம்”
என்று பீதியைக் கிளப்பினான். இவனே எருமைக் கடா சைசில் இருக்கிறானே..இவன் பயப்படச் சொல்கின்ற சீனியர் ஆனை சைசிலே இருப்பானோ என்று வயிற்றில் புளியைக் கரைத்தது.
அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். நிலத்தினின்றும் ஒரு அடிக்கு எழும்பிய மூடி போட்ட கழிவு நீர்த் தொட்டி இருந்து. அந்தத் தொட்டியின் மூடிதான் சீனியர்கள் உட்கார்ந்து தேனீர் அருந்தும் ஆஸ்தான பீடம். அதற்குப் பக்கத்திலே தான் எல்லாரும் சாப்பிடவேண்டிய மெஸ் இருந்தது (என்னே கட்டிடக் கலையின் மேன்மை !). அல்லது சோற்றைத் தின்று விட்டு அங்கே உட்கார்ந்து கொண்டு போக வர பெண்களைக் கண்டு கொண்டு கிண்டல் அடிப்பது என்று பெரிய வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிலே சிலர் அமர்ந்து கொண்டு கதைத்துக் கொண்டு இருந்தனர்.
“நம்ம நல்ல நேரம்.,அவர் ஊரிலே இல்லையாம். அறை பிச்சு உதறுவார்னு சொல்றாங்க”
”ஹிந்துஸ்தான் காலேஜில நீ பார்க்காததா இங்க புதுசா பண்ணிடப் போறானுங்க ?”
”தெரியலை..இப்போதைக்கு நிறைய சீனியர்ஸ் ஹாஸ்டல்ல இல்லை. அதனால ரொம்ப பிரச்சினை இல்லைன்னு சொல்லிக்கிறானுங்க”
அப்போது ஒன்று புரிந்து கொண்டேன். இவன் ஆள்தான் வளர்ந்திருக்கிறானே ஒழிய என்னைப் போன்ற மன நிலையில் தான் இவனும் இருக்கிறான். சரி, ஆனாலும் சாப்பிடப்போகும்போது அல்லது வெளியில் போகும்போது இருவரும் சேர்ந்தே செல்வது என்று முடிவெடுத்தொம். சேர்ந்து போகும்போது சீனியர்களிடம் மாட்டி கொஞ்சம் சீரழியாமல் இருக்கலாம் என்று ஒரு நப்பாசை.
அன்று மாலையே ஒரு சின்னப் பையனும் அவனது தந்தையும் எங்கள் அறையைத் தேடி வந்தனர். பையனைப் பார்த்தால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போய் திரும்ப அகப்பட்ட மாதிரி இருந்தது. அந்தப் பையனின் தந்தை பேசினார்:
“தம்பி..என் பையன் பேரு ஐயப்பன். இந்த ரூம் தான் கொடுத்து இருக்காங்க.”
”வாங்க அங்கிள். நாங்க ரெண்டு பேரும் தான் இங்க ரூம்மேட்ஸ். உள்ள வாங்க” என்றான் மதன்.
அவர் வந்து அமர்ந்தார். சென்னையில் இருந்தும் வந்து காரைக்குடி வந்து வெய்யிலில் காய்ந்த அலுப்பு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“தம்பி..என் பையன் மட்ராஸிலே தான் படிச்சான். வீட்டுக்கு ரொம்ப செல்லமான பையன். இங்கே ராக்கிங் ரொம்ப இருக்கும்னு சொன்னாங்க..”
“அதெல்லாம் கவலைப் படாதீங்க அங்கிள். நாங்க எல்லாம் இருக்கோம்ல” என்றான் மதன். நான் அவனை சற்றே நம்பமுடியாமல் பார்த்தேன். சிறிது நேரத்திற்கு முன் தொடை நடுங்கிக் கொண்டு இருந்தவன் இப்போது வீர வசனம் பேசுகிறானே என்று.
ஐயப்பனின் தந்தை அவனை விடுதியிலே விட்டுவிட்டு பின்னர் வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார். அதற்குள் சீனியர்கள் யாரோ மோப்பம் பிடித்து விட்டனர். 3 பேரையும் வெளியில் வரச் சொன்னார்கள். தயங்கிக் கொண்டே வெளியில் வந்து நின்றோம்.
”டேய் நீ மட்டும் மேலே வாடா” என்று ஐயப்பனுக்கு உத்தரவு வந்தது. நானும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். போய் திரும்பி வந்த ஐயப்பன் கண்நிறையக் கண்ணீரோடு தன் தந்தையோடு அறைக்கு வந்து சேர்ந்தான். அவர் கண்களும் கலங்கி இருக்க மதனும் நானும் “அடப் பாவமே..அடி பலமா பட்டிருக்குமோ” என்று கிசு கிசுத்துக் கொண்டோம்.
ஐயப்பன் தந்தை கலங்கிய கண்களுடன் “தம்பி..இவனை ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். ரொம்ப உலகம் தெரியாது. இங்கே இவன் கிட்ட ஒரு குப்பியைக் கொடுத்து இதிலே அசிங்கமா நிரப்பி வரச் சொல்லி இருக்காங்க”
எங்கள் இருவருக்கும் பகீரென்றது. “அடப்பாவி இதைப் போய் அப்பாவிடம் சொல்கிற அளவிற்கா இவன் வளர்ப்பு இருக்கிறது ?இவனோடு எப்படி காலம் கடத்தப் போகிறோம் ?”
அவரிடம் “சார்..இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குச் சொல்லிருப்பாங்க. அதை இவன் இப்படி சீரியஸா எடுத்துகிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்க எல்லாம் இருக்கோமே..பயப்படாதீங்க” என்று மதன் அவருக்கு தைரியமூட்டினான். நானும் தலை அசைத்து வைத்தேன்.
அவர் சென்ற பின் “டேய்..வாழ்க்கையிலே ஏதாவது சாமி புக் பார்த்து இருக்கியா ?”
ஐயப்பன் “பார்த்து இருக்கேனே..புராணம் மாதிரி”
“டேய் இது அதுக்கில்லை..வாழ்க்கை சம்பந்தப் பட்ட”
ஐயப்பனுக்கு பல்பு எரிந்து அணைந்தது “டேய் டேய்..நீங்க ரெண்டு பேரும் வேற ஏதொ விஷயம் பத்திப் பேசறீங்க. டபுள் மீனிங்கா” என்றான் குழந்தை போல வெட்கப்பட்டுக்கொண்டே. உடனே மேலே பரண் மீது பத்திரப்படுத்தி வைத்து இருந்த ஃபிலிம்ஃபேர் புத்தகங்களையும் அதை விட மிகவும் “விளக்கமான” புத்தகங்களையும் ஐயப்பன் முன்னே எடுத்து வைத்தான் மதன். பார்த்த ஐயப்பனுக்கு பகீரென்றது.
”டேய் இதெல்லாம் தப்பு. அதுவும் வார்டனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்”
”டேய்..வாழ்க்கைல நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. போகப் போகப் பார்ப்பே”
இப்படி ஐயப்பனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தின் அரிச்சுவடியைத் திறந்து வைத்தான். பிறிதொரு நேரம் இதே “புத்தகங்களை” கோபால் என்ற சக மாணவனிடம் காட்டியபோது அவன் வெட்கப் பட்டு ஓடியே போய்விட்டது மறக்க முடியாதது. இப்படியாக மதன் பலருக்கும் வகுப்பெடுக்கும் “பெருசு” ஆக மாறிப் போனான்.
அன்று இரவு சாப்பிட்டுவிட்டு மூன்று பேரும் சீனியர் கைகளில் மாட்டாமல் அறைக்கு வந்து அமர்ந்தோம். அறையின் சன்னல் உட்புறம் தனிக்கதவாகத் திறக்கக் கூடியது. வலை சன்னலிலேயே வெளிப்புறமாய் வேயப்பட்டு இருந்தது. இயற்கையிலேயே பயந்த சுபாவமுள்ள ஐயப்பன் அப்பாவியாய்க் கேட்டான்: ”இங்கே பாம்பெல்லாம் நிறைய உண்டு அப்படின்னு சொல்றாங்களே”
உடனே மதன் அலட்டலாக :”மச்சி மனுஷன் இருக்கிற இடத்திலே பாம்புங்க ஜெனரலா வராதுடா”
“ஷ்யுரா ?”
“ஆமாண்டா..இப்போகூட ஜன்னலை திறக்கலாம். ஒரு ப்ராப்ளமும் இல்லை” என்று உதார் விட்டுக் கொண்டு திறந்தான். அங்கே ஒரு அடி நீளப் பாம்பு ஒன்று சன்னலின் ஓட்டைக்கு மேலே தொங்கிக்கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தது ! திறந்த வேகத்திலேயே கதவை மூடி அசடு வழிந்தான். அன்றிலிருந்து படித்து முடியும் வரை பார்த்த பாம்புகளுக்கு கணக்கே இல்லை. ஓட்டை விழுந்த வலையுடைய அந்த சன்னலும் இரவு நேரத்தில் திறக்கப் படவே இல்லை.
முதல் இரண்டு வாரங்கள் ஆகும் வரை எவன் சீனியர் எவன் கிளாஸ்மேட் எனப் புரியவில்லை. ஒருமுறை அறை எண் 4 இன் பாத்ரூமில் இருந்து மதன் ராத்திரி வெளியே வர, அவனை சீனியர் என நினைத்து அங்கு இருந்த அத்தனை பேரும் நடுநடுங்கியதும் உண்டு.
முதல் செமெஸ்டர் தேர்வுகள் வரும் நேரம். மதனுக்கு வேதியியல் மீது ஆர்வம் சிறிது கூட இல்லை என்பது மிகவும் தெளிவாகியது. அவன் படித்து நான் பார்த்ததாக எனக்கு ஞாபகமே இல்லை (இனார்கானிக் கெமிஸ்ட்ரியைத் தவிர). ஒரு முறை தேர்வின் அறை முன்னே கூடே படித்த தீபா மிகவும் டென்சனாக இருக்க, இவன் ராஜ ராஜ சோழன் போன்று வலம் வந்து கொண்டு இருந்தான். அதைக் கண்ட தீபா “மதன்.. நல்லா படிச்சிருக்கே போல..ரொம்ப கான்ஃபிடெண்டா இருக்கியே..” என்று கூற, மதன் “3 யூனிட் நல்லா தரோவா படிச்சிட்டேன்..பாஸ் பீஸ்..”என்று இருவிரலை உயர்த்தி முழங்கினான். ஐந்தாவது யூனிட்டில் ஒரு சின்ன போர்ஷனை மட்டும் விட்டுவிட்டு டென்சனின் சிகரமாக வியர்த்துக் கொண்டு இருந்த தீபா எங்கே ? அரைகுறையாகப் படித்தாலும் பாஸ் ஆகும் தெனாவெட்டோடு திரிந்த இவன் எங்கே ? பாஸ் செய்ய என்ன தேவை என்று கணக்கில் எடுத்துக் கொண்டான். “டேய் 5 யூனிட்ல 3 நல்லா படிச்சா போதும். பாஸ் ஆயிடலாம்” என்ற மிகப் பெரிய சூக்குமத்தைக் கண்டுபிடித்ததே அவன் தான். அதுவே பலருக்குத் தாரக மந்திரம். எவ்வளவு பெரிய சப்ஜெக்டானாலும் முதல் நாள் ராத்திரி இப்படி 3 யூனிட் படிப்பது மட்டும் அவன் வழக்கம்.
ஆனால் அதற்காக வகுப்பறையில் கஷ்டப்பட்டு கவனிக்கவோ நோட்ஸ் எடுக்கவோ இல்லை. சொல்லப் போனால் 2-3 பேரைத்தவிர ஒரு பயலும் எந்த வாத்தியாரையும் கவனித்துக் கேட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. பக்கத்து அறை மதிவாணன் ஒருவன் மட்டுமே எந்த ஒரு வகுப்பானாலும் நோட்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தேர்வு நேரத்தில் ஒன்றிரண்டு அறிவு ஜீவிகளைத் தவிர, அத்தனை பேரும் அவனுடைய நோட்ஸை நகலெடுத்து நெட்டுருப் போட்டு பாஸ் ஆவோம். அதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் காலகாலமாய் மதிவாணனுக்குக் கடன்பட்டு இருக்கிறோம். அப்படித் தேர்வான கூட்டத்தில் சிலர் இப்போது பேராசிரியர்களாக இருக்கின்றனர் என்றால் மதியின் பெருமையை சொல்லவும் வேண்டுமா ? ஆனால் மதன் பாதை வித்தியாசமனதாக இருந் தது.
அப்போது 9 பேராக சேர்ந்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார்கள். அதிலே C++ மற்றும் இன்ன பிற விஷயங்களைக் கற்றுத் தானே தேர்ந்து கொண்டான். இந்தக் கணினிக் கல்வி தான் அவனுடைய வாழ்க்கையைப் பின்னர் மாற்றி அமைத்து. பேரளவில் பாஸ் செய்துவிட்டு படிப்பு முடிந்தும் சக மாணவனான முத்துவுடன் சேர்ந்து ஒவ்வொரு கம்பனியாக திறந்து திவாலாகி மூடுவதாக அவனது வேலை வாழ்க்கை ஆரம்பித்தது. ராம்கோவில் ஐயப்பனோடு வேலை கிடைத்தபோது அங்கே போய் சேர்ந்தான். என்ன..ஐயப்பன் சேராமல் விட்டு விட்டான்.
“மச்சி தப்பிச்சிட்டியேடா”
என்ற ஒற்றை வரிக் கடிதம் ஒன்றை எழுதி ஐயப்பனுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலைச் சுருக்கமாய் காட்டிக்கொண்டான்.
எங்கள் வகுப்பில் நான் நெல்லை, மதன் மதுரை. இரண்டு பேர் மட்டுமே தென் தமிழ் நாட்டின் மணத்தை எங்கள் நெஞ்சில் தேக்கி வைத்து இருந்தோம். சுகதேவ் மற்றும் ராஜாவைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் “பட்டணவாசிகள்” – ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லோருமே சென்னைவாசிகள். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பிராணிகள் மிகக் குறைவு. இதிலே ஒருத்தனுடைய தந்தையார் மிகவும் புகழ் வாய்ந்த தமிழ்ப்பேராசிரியர் ! ஆனால் அவனுக்கோ தமிழ் ஜீரோ.
எங்கள் பின்னணி நானும் மதனும் எளிதாகப் பேச உதவியது. பேசியதெல்லாம் வர்ணிக்க முடியாத அளவிற்கு கேவலமான அல்லது உதவாக்கரை விஷயங்கள் என்றாலும் இப்போது எண்ணிப் பார்க்கும் போது அது நட்பின் ஆரம்பத்தில் ஒரு நல்ல வரைபடமாக அமைந்தது என்று தெரிகிறது. தென்தமிழ்க் கொச்சை கொடையாய் அளித்த கெட்ட வார்த்தைகள் எங்கள் இருவர் பேச்சிலும் சரளமாகப் புரளுவது கேட்டு சற்றே “சொஃபிஸ்டிகேடட்” ஆன சென்னைவாசிகளுக்கு சிறிது கண்றாவியாகத் தான் இருந்தது. ஒருமுறை இவ்வாறு சரளமாக வார்த்தைகளை எடுத்துவிட்ட என்னுடைய “புலமையை”க் கேட்டு சென்னையிலே பிறந்து ஆறடி வளர்ந்திருந்த அரவிந்த் (காதில் “why blood ? same blood” ஆகி) கண் கலங்கி விட்டான்! ஆனால் முதலில் ”அக்யுஸ்ட்” போல பார்க்கப்பட்ட நாங்கள், பின்னர் ஒரு கட்டத்தில் எல்லாருமே அப்படிப் பேச “சரி..இது கல்லூரி பாஷை” என்று புரிந்து தெளியும்படி ஆனது.