இந்தியாவில் மதக் கலவரம், ஜாதிச் சண்டை போன்ற பல துயர்கோலங்கள் இருந்தும் அவை எல்லாம் தீண்டாது வாழும் ஒரு சாதாரணக் குடிமகன் நான். தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கும் ஒரு நல்ல கல்லூரியில் முட்டி மோதி போட்டியிட்டு ஒப்பன் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முடித்து 4 வருஷம் பாட்டு, நண்பர்கள், கவிதை என வாழ்க்கையின் பொழுதை ஓட்டி, பருவ சுரப்பிகளின் உந்துதல் வருங்காலை பூவையரை பார்த்து, புன்னகைத்து, கொஞ்சி, சில சமயம் மிஞ்சி (ரவுசு விட்டு), ஆனந்தமாய் பொழுதைக்கழித்து, கடைசி வருடத்தில் GRE எழுதி முட்டி மோதி ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் phd க்கு இடமும் வாங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்து இறங்கினேன். 3.5 வருடம் கழித்து தாய் தந்தையரை பார்க்க வேண்டி கொலம்பியாவிலிருந்து டிக்கட் திருவனந்தபுரத்திற்கு எடுத்தேன்.
அந்த நெடும் பயணம் முடிந்து ஆசையுடன் வந்து இறங்கிய நாள் Dec 6 (babri masjid day). நெல்லை செல்ல திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலின் தமிழ்நாட்டு எல்லை வரை கேரளா முழுவதும் அன்று அடைப்பு. காலையில் 9 மணிக்கு போய் விமான நிலையத்தில் சென்று இறங்கினேன். பெற்றோர் ஒரு வாடகை வண்டி அமர்த்திக்கொண்டு வந்திருந்தனர். நெல்லை செல்லும் பயணம் துவங்கியது. செல்லும் வழி எங்கும் மருந்த்துக்குக் கூட கடை இல்லை. நாகர்கோவில் போகும் வழியில் சற்று தூரம் தான் சென்றிருப்போம். வந்தது ஒரு பெரிய எதிர்ப்புகூட்டம் இசுலாமிய மொழிகளை உரக்கக் கோரிகொண்டு. "சரி, கூட்டம் போன பிறகு செல்லலாம்" என்று ஒதுங்கினோம்.
எங்களை கடந்து செல்லப் போகிறது என்று நினைத்த கூட்டம் எங்களை நோக்கி வந்தது. வண்டியின் கதவினை உடைக்க ஆரம்பித்தது. ஓட்டுனர் இந்து முன்னணியின் அஙத்தினர். அவர் தம் நெற்றியில் நல்ல குழைத்த குங்குமமும் சந்தனமும் வைத்துச் சாற்றி இருந்தார். என் தந்தை திருநீறு அணியும் வழக்கமுள்ளவர். என் தாயோ நல்ல மங்கலமாகக் குங்குமம் வைத்திருந்தார். நான் மட்டுமே என் நெற்றியில் ஒன்றும் இல்லாமல், அரை குறை தாடியுடன் சிறிது இசுலாமியனாகத் தோன்றினேன். மற்ற எல்லாரும் இந்து மதத்தின் பிரதிநிதியாகத்தோன்ற, அந்த இசுலாமியர்கள் ஆத்திரம் அடைந்து சரமாரியாகத் தாக்கத் துவங்கினர். காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக, அந்தக் கூட்டதிலேயே இருந்த முசுலிம் பெரியவர் ஒருவர் வந்து அவர்களை விலக்கி விட, தப்பித்தோம்.
சரி..தலைக்கு வந்து தலைபாகையோடு போயிற்று என்று, அடிபட்டாலும் ஒடிக் கொண்டிருந்த வண்டியோடு நெல்லை நோக்கி மறுபடி பயணப் பட்டோம். கிங்கரனிடமிருந்து தப்பி எமனிடம் அகப்படுவதுபோல் இன்னொரு கும்பல் நேரே எம்மை பார்த்து ரோட்டில் ஓடி வந்தது. இம்முறை கல், கட்டை எல்லாம் இல்லை. கத்தி, அரிவாள். பயந்து போன நாங்கள் அப்படியே வண்டியை திருப்பி அவர்களிடமிருந்து தப்பிக்க சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டி ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம் அவர்கள் யார் என்று தெரியாமலேயே. அது ஒரு இந்துக் குடும்பத்தின் வீடு. அவர்களிடம் நிலமையை எடுத்துசொல்ல அவர்கள் மிக அன்போடு, எங்களை உள்ளே அழைத்து சென்ரு நல்ல முறையில் கவனித்துக்கொண்டனர். எங்களுக்கெல்லாம் நல்ல விருந்து போன்ற உணவு கொடுத்து, மாலை வரை தங்க வைத்து பின்னர் பத்திரமாக வழி அனுப்பினர்.
இது எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மிக அதிர்ச்சியான சம்பவம். நிறைய சிந்தனை செய்ய வைத்த ஒரு சம்பவம். இதற்கு முன் நான், ஒரு நல்ல இந்துவாக வாழக் கூட இல்லை. மதம் என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து வந்தவன். மதச்சார்பின்மையை நண்பர்களுடன் காப்பி, பலகாரங்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே பெரிதாகப் பேசியவன். நிலமையின் வீரியம் அறியாலேயே, "மக்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும்" அன்று பிரசங்கித்தவன். இப்போது அதையெல்லாம் விட்டு விட்டு மதச்சார்பின்மையை உண்மையிலேயே பின் பற்ற விழைபவன். அன்று என் பெற்றோருக்கோ அல்லது எனக்கோ ஏதாவ்து ஒன்று ஆகி இருந்த்தால், நான் நிச்சயம் தடம் மாறித்தான் போய் இருப்பேன். Hey ram படத்தின் காட்சிகள் எல்லாம் கண் முன்னே வந்தன. இது போன்ற சம்பவங்களின் வீரியம் சற்று கூடுதலாக இருந்தால் சாகேத ராமன்கள் நிச்சயம் தோன்றத் தான் செய்வார்கள்.
அதேபோல அந்த முகம் தெரியாமல் உதவிய அந்த இந்துக்குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். துணிந்து உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை இந்தியா வாழும் என்ற நம்பிக்கையும், நாமும் அவர் போல உதவும் தன்மை கொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வைத்த ஒரு இனிய நிகழ்வுமாகும்.