Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Sydney  !!

Friday, September 02, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 4

இப்படியாக பாடல் வரிசையை தீர்மானித்த பின், சுசீலாம்மா "யாருப்பா கூட வாசிக்க போறாங்க ?"ன்னு கேட்டாங்க.

நான்: "அம்மா..இங்க ஒரு professional orchestra இருக்கு. Guitar Jose னு ஒருத்தர் இருக்கார். உங்க கூட எல்லாம் asianet tv ல வாசிச்சு இருக்கார். அவர் கூட பிரணவ் என்ற கொச்சின் கலாபவனில் பயின்ற ஒரு தபலா மற்றும் SPD drums வாசிக்கற ஒருத்தரும் இருக்கார். இவங்களை வெச்சி தான் நாம பண்ணலாம்னு எனக்கு எண்ணம்"

சுசீலா : "ஓ..Guitar Jose ஆ ? அவர் super ஆச்சே..பிரமாதமா வாசிப்பாரே...அவர் அட்லாண்டவில தான் இருக்காரா இப்போ ?"

நான்: "ஆமாம்மா. இப்போ இங்க பல பேருக்கு வாசிக்கறதோடு மட்டும் அல்லாமல் கத்துக் கொடுக்கவும் செய்யுறார்"

(...இந்த நேரத்தில் ஜோஸைப் பற்றி இங்கே சொல்லி ஆக வேண்டும். அற்புதமான கலைஞர். யேசுதாஸ், சித்ரா, ஜெயசந்திரன், SPB, சுசீலா போன்ற உன்னதமான கலைஞர்களுடன் மேடையிலே கிடார் வாசித்த அனுபவசாலி. கையிலே கிடாரை எடுத்தார்னா, மாண்டொலின், சிதார், வீணை எல்லவற்றின் ஒலியையும் அவற்றில் அனாயாசமாக கொண்டு வரும் சூரர். வாசிப்பு அப்படியே ஒலி நாடாவில் கேட்பது போல் இருக்கும். மலையாள படங்களின் இசையமைப்பாளரான தேவராஜனுக்கு 5 வருடம் வலது கரமாக விளங்கி அத்தனை orchestra விற்கும் notes எழுதி conduct செய்த வித்தகர். இப்படிப்பட்டவருடன், மார்ச்சு மாதம் நாஷ்விலில் கச்சேரி செய்தேன். அந்தக் கச்ச்சேரிக்கு "பாட்டும் நானே" பாடலை எடுப்பது என்று தீர்மானித்து விட்டாயிற்று. ஆனால் எங்கனம் அதன் வீணை மற்றும் புல்லாங்குழல் இசை வரிகளை எடுப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த நேரம் தெய்வ சங்கல்பமாக ஜோஸ் வந்து சேர்ந்தார். மிருதங்கத்தில் பரதனுடன் நான் முன்னமேயே சுரங்களை எல்லாம் பயிற்சி செய்து வைத்திருந்த்தேன். (பரதனைப் பற்றி பின்னர் சொல்லுகிறேன்). நண்பர் புலிகேசிக்காக வேண்டி அத்துணை வீணை மற்றும் புல்லாங்குழல் இசை வரிகளை சுரப் படுத்தி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொண்டு இருந்தேன். ஜோஸ் வந்தார். கிடாரை எடுத்தார். வீணை வரிகளை அப்படியே உள்ளது உள்ளது போல் மீட்டித் தள்ளினார். அப்படியே வாயடைத்துப் போய் உட்கார்ந்தோம் எல்லோரும் ! பின்னர் அவர் நாஷ்விலில்னந்த பகுதிகளை வாசிக்கும் நேரம் பார்வையாளர்கள் மத்தியிலிருந்தும் மிகுந்த கரகோஷம் எழுந்தது )

சுசீலா : "ரொம்ப நல்லதுப்பா..இந்த மாதிரி ஆட்கள் மற்றும் குழு இருக்கின்றது என்று தெரிந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருக்கலாமே முன்னமேயே"

நான் : "நிச்சயமாக அம்மா. அடுத்த முறை போதிய அவகாசம் கொடுத்தால் நிச்சயம் நிறைய கச்சேரிகள் செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன்"

எனக்கு சுசீலாம்மாவுக்கு ஜோஸ் அவர்கள் பரிச்சியமான்வர் என்பது சிறிது ஆசுவாசத்தைக் கொடுத்தது. பழகிய கலைஞர்கள் மத்தியிலே ஒரு நல்ல ஒட்டுறவு இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது உண்மையுமானது.

பிறகு தேன்ராஜ காளியப்பனை தொடர்பு கொண்டோம். தங்கமான மனிதர். அத்தனை பாடலின் mp3 வடிவங்களையும் உடனடியாகத் தந்து உதவினார். பின்னர் ஜோஸ¤டன் கலந்து ஆலோசனை செய்தேன். அவர் சொன்னார்:

"முரளீ, எனக்கு ஒவ்வொரு பாட்டும் அந்த original போலவே வரணும். அது வரை எனக்கு தூக்கம் வராது. எனவே நான் இப்பொழுதே ப்ரொகிராம் செய்ய ஆரம்பிக்கிறேன் " என்று. இப்படியாக முழு நிகழ்ச்சியும் sequence செய்து வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டது. கையில் ஜோஸ் போன்ற திறமை மிகுந்த ஆட்களை வைத்துக் கொண்டு எதற்காக seq செய்ய வேண்டும் ? ஆனால் என்ன நேர்ந்ததென்றால், அமெரிக்காவில் வாழும் அத்தனை இந்திய கீபோர்டு வாசிப்பவர்களும் (professional) அந்த வார இறுதியில் கிடைப்பவராக இல்லை. குன்னக்குடி வைத்தியனாதனின் பிள்ளை முதற்கொண்டு எல்லாவரிடமும் கேட்டு பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் வேறு வழி இன்றி ஜோஸிடம் seq செய்ய சொன்னேன். இங்கே நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். seq செய்து வாசிப்பது என்பது, எனக்கும் சரி, ஜோஸ¤க்கும் சரி, பிடிக்காத காரியம் (சுசீலாம்மவுக்கும் பிடிக்காத காரியம் என்பது பின்னே தெரிந்தது). ஆனால், ஒவ்வொரு பாடலையும் seq செய்வது என்பது எளிதான செயல் இல்லை. ஜோஸை போன்ற ஒரு திறமை வாய்ந்த கலைஞனுக்கே ஒரு பாடலுக்கு 5 மணி நேரம் பிடித்தது. இப்படியாக 25 பாடல்கள் ! மனிதர் அயராமல் ராப் பகல் உட்கார்ந்து எல்லாப் பாடல்களையும் முடித்து விட்டார் ! நான் ஒவ்வொரு வார இறுதியிலும் சென்று அவருடன் அமர்ந்து எல்லா குறிப்புகளையும் திருத்தி பதிவுகள் செய்து கொண்டேன். இப்படியாக 25 பாடல்கள் தயாரானது.