ஆதி மனிதன் காதலுக்குப் பின் - இந்தப் பாடல் இசைத்தட்டிலே P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் ஜமுனா ராணி சேர்ந்து பாடியதாகும். படம் - பலே பாண்டியா. இந்தப் பாடல் நான் கேட்காத ஒன்று என்பதால் இதனை முதலிலேயே பல முறை கேட்டுக் கொண்டு இருந்தேன். இந்தப் பாடலின் பயிற்சி வந்த போது தான் தெரிந்தது முதலாம் hummingஉம் பாடலில் உள்ள சஙதிகளும் எவ்வளவு கோட்டை நான் விட்டு இருக்கிறேன் என்று. முதலில் ஒரு swing ஸ்டைலில் கிடாருடன் JR உம் PBS உம் மாறி மாறி ஹ¤ம் செய்வார்கள். இதை நன்றாக சொதப்பினேன். அதற்கு ஜமுனாம்மா பொறுமையாக பல முறை சொல்லித் திருத்தினார்கள். நான் சுரப்படுத்தி மனப்பாடம் செய்வதை பார்த்து விட்டு சுரமாக சொல்லிக் கொடுத்தார்கள். இதற்கு ஒரு 15 நிமிடம் பிடித்தது. பின்னே இந்தப் பாடலில் வரும் அனுபல்லவியில் பிரச்சினை இருக்கவில்லை. ஒழுங்காக பாடி விட்டேன்.
சரணம் வரும்போது
ஊரை விட்டு ஓடி வந்த காதல் இது
உறவென்று சொல்லி வந்த காதல்
கால்நடையாய் வந்த காதல் இது
காவியத்தில் இல்லாத காதல்
என்ற் வரும்.
இந்த இடத்திலும் எனக்கு மக்கர் பண்ணியது. நான்:
pada pada pamagama pa;SaSa Sa;SaSa
dani Sani padapada pa;ma ga;;;
mapa mapa marigama ma;;pa ni; -nini
daSa;ni daSanida pa;;; pa;;;
என்று பாட, ஜமுனாம்மா என்னை நிறுத்தி:
"முரளி சங்கதிகள் எல்லாம் தப்பா பாடறியேப்ப்பா. திருத்திக்கணுமே" என்றார். "அம்மா நீங்க சொல்லிக் கொடுத்தீங்கன்னா திரும்ப பாட முயற்சிக்கிறேன்" என்று சொன்னென்.
pada pada pa,m gama pa;dani Sa;SaSa
nSani,da danidani da;;pa ma;;;
mapamapa magariga ma;;pa ni; -nini
da,nSa,n dnini,pa pa;;; pa;;;
என்று திருத்தி சுரப்படுத்திக் கொடுத்தார்கள். இது முடிந்து கடைசியில் humming மறுபடி. இங்கேயும் நான் மக்கர் செய்ய முழு சுரங்களையும் எழுதிக் கொடுத்தார். சுரங்கள் கையில் வந்த பின் சிறிதே ஜுரங்கள் அகன்றன. ஆனாலும் எனக்கு என் மீதே சற்று கடுப்பாக இருந்தது. இந்தப் பாடல் அவ்வளவு கஷ்டமான பாடலும் இல்லை, அவ்வளவு சங்கதிகள் செறிந்த வரிகளும் இல்லை. ஆனாலும் tension காரணமாகப் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நினைத்து பார்த்தால் இப்போது சிரிப்பு தான் வருகிறது. எல்லா வரிகள் மீதும் சுரங்களை எழுதிக்கொண்டு விட்டேன். "முரளி, சுரத்தை எழுதிக்கிட்டா, உனக்கு பிரச்சினை இருக்காது" என்று ஜமுனாம்மா சொன்னது போல் பின்னர் பிரச்சினை இன்றி பாட முடிந்தது.
இந்தப் பாடல் பயிற்சி முடியும் முன்னரே சுசீலாம்மாவும் ஜமுனாம்மாவும் சஹஜமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்பப்போ என் காலை வாரிக் கொண்டே இருந்தார் சுசீலாம்மா. விழியே கதை எழுது பாடலில், "தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது" என்ற இடத்தில் எப்படி classical கமகம் வருகின்றது என்பதை அழகாக விளக்கிச் சொன்னார் சுசீலாம்மா. "என்னப்பா முரளி..சொந்த சங்கதி போடறே ? MSV சொந்தமா சங்கதி போட்டா விட மாட்டாருப்பா" என்று சொல்லி சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளாலாம் போல இருந்தது. ஆனாலும் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்பட்ட சந்தோஷம். நான் போட்ட சங்கதியை அப்படியே காற்றில் விட்டு விட்டு அவர்கள் சொல்லிக் கொடுத்த சங்கதியை பழக ஆரம்பித்தேன். இரண்டு மூன்று விளக்கங்களுக்கு பிறகு பிடித்துக் கொண்டேன். (பின்னர் நிகழ்ச்சியில் இந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது). அதற்குப் பிறகு வந்தது காற்று வெளியிடை கண்ணம்மா.
சுசீலா : "இந்த பாட்டு இருக்கா ?"
நான் : "ஆமாம்மா"
சுசீலா : "யாரு பாடறது ?"
நான் : (சிறிதே அதிர்ச்சியுடன்) "நான் தான்.."
சுசீலா : "அய்யோ..நீயா ? எனக்கு பாட்டு சுத்தமா மறந்து போச்சே"
(முற்றிலும் மாறுபட்ட மெட்டில் பாடிக் காமிக்கிறார்)
நான் : (அதிர்ச்சியுடன்) "அம்மா..ட்யூனையே மாத்திட்டீங்களே"
சுசீலா : (பலமாக சிரித்துவிட்டு) "தெரியும்பா..நான் தானே அதை பாடினேன். பாட்டை போட்டுக் காமி"
பாட்டை போட்டவுடன் அந்த சங்கதிகளை அப்படியே கிரஹித்துக் கொண்டார். அதைப் பார்த்து அசந்து போனேன்.
சுசீலா : "ஆ..நீ பாடுப்பா"
நான் : "செத்தேன்"
எல்லோரும் சிரித்து ஓய்ந்தனர்.
நான் : "சங்கதிகளை எதுக்கும் ராத்திரி ஒரு தடவை பார்த்துக்கறேன்"
சுசீலா : "ராத்திரி பூரா பாடி குரலை கெடுத்துக்காதே, ப்ரோகிராமில் ஒழுங்கா பாடணும் புரியுதா ?"
நான் : "சரிம்மா"
No comments:
Post a Comment