பயிற்சி நேரத்தில் பிரணவ் அவர்களின் தபேலா மற்றும் SPD 20 என்ற மின்தாள வாத்தியத்தை (ஹி ஹி..electronic drums) வாசிக்கும் திறமை அறிந்தேன். மனிதர் கொச்சின் கலாபவனில் முதல் 5 வருடம் இரண்டாம் நிலை தபலா வாசிப்பாளராகவும், பின்னர் 5 வருடம் முதன்மையான தபலா வாசிப்பாளராகவும் இருந்த நல்ல அனுபவஸ்தர். P3 விசாவில் பல பேர்களுடன் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த திறமையாளர். சித்ரா, ஜெயசந்திரன் போன்றவர்களுடன் சர்வசாதாரணாமாக வாசிக்கும் வழக்கம் உள்ளவர். இவர் எப்படி வாசிப்பார் என்று தெரியாமலேயே ஜோஸ் அவர்களின் பேச்சை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருந்தேன். மனிதர் மலையாளம் தவிர பிறமொழிகள் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறவர். எனவே வாய் பேசாததை கை பேசும் என்று வந்த உடன் நிரூபித்தார்.
மாணிக்க வீணை பாட்டை பயில ஆரம்பித்தோம். ஜோஸ் தனது கிடாரை எடுத்து முதலில் வரும் வீணை பகுதியை மீட்டிக் காட்டினார். சுசீலாம்மாவிற்கு மிகவும் திருப்தி. முகம் முழுவதும் புன்னகையுடன் ஜோஸின் வாசிப்பை புகழ்ந்தார். ஜோஸிர்க்கு மலையாளமே முதன்மையான மொழி. ஆங்கிலம் சிரமத்துடன் புரிந்து கொள்வார். சுசீலாம்மாவிற்கு தெலுங்கு முதல் மொழி. பேசும் தமிழில் சிறிதே தெலுங்கு வாடை அடிக்கும். பாடும் தமிழில் ஒரு தவறு இருக்காது. அம்மாவிற்கு ஆங்கிலம் அவ்வளவு இலகுவாக வருவதில்லை என்று புரிந்து கொண்டேன். இவர்கள் இருவரும் பேசுவது அறை குறை தமிழில். அது ஒரு வேடிக்கையான ஆனால் ரசிக்கக்கூடிய ஒரு விஷயாமாக இருந்தது. இரு பெரிய கலைஞர்கள், மொழி வேறு என்றாலும் இசையை புரிந்து கொண்டு இசைந்தது பார்க்க மிகவும் நிறைவாக இருந்தது. சுசீலாம்மா பயிற்சி சில சமயம் நிற்கும்போதெல்லாம் ஜோஸ் அவர்களுக்காக தான் மலையாளத்தில் பாடிய பாடல்களை சிறிது பாடி மகிழ்வித்தார். என்னிடம் "முரளி, அவரோட மொழில பாடினா அவர் சந்தோஷப்படுவார் இல்லையா?" என்று சொல்ல எனக்கு அவர்கள் மேல் மதிப்பு உயர்ந்தது. கச்சேரியில் முழுதும் தமிழ்ப்பாடல்களே. ஆனால் சுசீலாம்மாவோ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கணக்கில்லாமல் பாடி இருக்கிறார். ஒரு சக பிறமொழிக் கலைஞன் தன் கச்சேரிக்காக தமிழ் மொழியில் உள்ள பாட்டுக்களை எல்லாம் பயின்று வைத்திருக்கிறான் என்று தெரிந்து தாமும் அந்த கலைஞனை மகிழ்விக்க அவன் மொழிப் பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடியது அவரின் கலிஞர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை காட்டியது. பிரணவிற்கும் ஜோஸிற்கும் சுசீலாம்மாவின் மலியாளப்பாடல்கள் அத்தனையும் அத்துப்படி. நௌஷாதின் இசையில் த்வனி படத்தில் வந்த "ஜானகி ஜானே" என்ற அழகான பஜன் பாடலைப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். மாணிக்க வீணை பாடல் மேடையில் முதல் பாடலாக மிகவும் அழகாக ஒலித்தது. பிரணவின் வாசிப்பை இதிலே கேட்டு மகிழ்ந்தோம். மிருதங்கத்திலே பாதியை வெட்டி எடுத்தால் போல் இருக்கின்ற "மிருதங்க தபலா" வில் முழு மிருதங்க ஒலியையும் கொண்டு வந்து மகிழ்த்தினார்.
பின்னர் ஜமுன்னாம்மாவின் மிகவும் பிரபலமாகிய பாடலான "மாமா மாமா" விற்கு வந்தோம். அந்த பாடல் கடைசியாக எடுத்த பாடல் என்பதால், ஒரு interlude மட்டுமெ எடுக்க நேரம் இருந்தது. ஆனால் ஜமுனாம்மா "இரண்டு interlude எடுக்கணுமேப்பா..இல்லைன்ன சரியா வராதே" என்று சொல்ல நாங்கள் எடுப்பதாக உறுதி அளித்தோம். ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை சந்திரோதயம் பாடல் பாடுவதற்காக வரச் சொல்லி இருந்தேன். அவரின் உச்சரிப்பு எனக்கு திருப்திகரமாக இல்லாததாலும், சங்கதிகள் முறையாக விழாததாலும் அவருக்கு இரு வேறு பாடல்களைக் கொடுப்பது என்று தீர்மானமானது. "துயிலாத பெண் ஒன்று" மற்றும் "மாமா மாமா" இரண்டு பாடல்களையும் அவர் பாடும்படியாக ஆனது. மனிதருக்கு வெண்ணை போல் வழுக்கிக் கொண்டு போகும் குரல். "துயிலாத பெண் ஒன்று" பாடலை மேடையிலும் பயிற்சியிலும் மிக அருமையாகப் பாடி பிரமாதப்படுத்தி விட்டார். பின்னர் நான் சந்திரோதயம் பாடினேன் பயிற்சியிலும். பாடி முடிந்தவுடன் ஆனந்த் என்னை கூப்பிட்டு "முரளி, ரொம்ப கர்னாடகமாக பாடுறீங்க. கொஞ்சம் மாற்றி பாடுங்களேன்" என்றார். ஏற்றுக் கொண்டென்.
"அம்மம்மா காற்று வந்து ஆடை" பாடலில் சுசீலாம்மா சிறிது கஷ்டப்படவே அந்த பாடல் நீக்கப்பட்டது. பெரிய கலைஞர்களுடைய பலமே தங்களுடைய பலவீனங்கள் என்ன என்று தெரிந்து வைத்திருப்பது தான் என்று அழகாக உணர்த்தினார். அந்தப் பாடல் சிறிது உயர்ந்த சுருதியில் இருப்பதால் அதை வேண்டாம் என்று தீர்மானித்தார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலும் பின்னே தள்ளப்பட்டது. முத்துமணி மாலை பாடல் வரும்போது "முரளி, இந்த பாடலை பல தடவை பாடியாச்சேப்பா..எனக்கு மனப் பாடமே ஆகிட்டது" என்றார். "இயற்கை எனும் இளைய கன்னி" பாடல் பயிற்சியின் போது "இதை பாடும்போது பாலுவிற்கு (SPB) இளவயது. எனக்கும் சுமாரா இளவயது. ஆனா இப்போ, உனக்கு இளவயசுங்கறதாலே சங்கதிகளாக போட்டு தள்ளறே, இப்போ நான் கொஞ்சம் குறைச்சு தான் போட முடியும் என்றார்". "அம்மா நீங்க இந்த வயசுல போடற சங்கதிகளே என்னை போன்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது" என்றேன் காற்று வெளியிடை பாட்டை நினைவு கூர்ந்து. இவ்வாறாக அத்தனை பாடல்களின் பயிற்சியும் முடிந்தது.
இந்த இடத்தில் SL பற்றிய ஒரு விவரத்தைக் குறிப்பிட வேண்டும். SL P.B.ஸ்ரீனிவாஸின் ரசிகர் மட்டுமல்ல. அவரைப்போன்ற குரலும் உடையவர். மயக்கமா கலக்கமா போன்ற பாடல்களை அவர் பாடினால் பக்கத்தில் PBS அவர்களே வந்து பாடியது போல் இருக்கும். உணர்வு பூர்வமாக நல்ல base voiceஇல் அழகான சங்கதிகளோடு பாடக் கூடிய நல்ல பாடகர். எனவே அவரை சுசீலாம்மாவுடன் பாட வைக்க வேண்டும் என்று என்னுள் ஒரு ஆசை எழுந்தது.
நான் : "ஹலோ SL.. அட்லாண்டா வந்து பாடுறீரா ? சுசீலாம்மாவோட ?"
SL : "ஆ..என்னையா கூப்பிடுறே ? நிதி நிலைமை சரி இல்லியேப்பா"
நான் : "யோவ்..நீரா பாடவும் மாட்டீர். கேட்டாலும் வர மாட்டேங்குறீர். சுசீலாம்மா கூட பாட ஒரு வாய்ப்பு இது..நான் தான் orchestra coordinator வேற...இங்க வந்தா மெருகு ஏத்தி பாட வைக்கலாம் அய்யா. கொஞ்சம் யோசிங்க"
SL : "நீ சொல்றது புரியுது. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு பின்னாடி வராது தான். நிச்சயமா வருத்தமா இருக்கு. இன்னொரு முறை கட்டாயமா வரேன்பா"
வருத்தமாக இருந்தது. பல PBS பாடல்களை அவருக்கு கொடுத்து, சுசீலாம்மாவுடன் அவரை பாட வைத்தால் மேடையில் சுசீலாம்மா அவரை செல்லமாக வம்பிக்கிழுப்பார்கள், சுவாரசியமாக இருக்கும் என்ற ஒரு ரகசிய நப்பாசை இருந்த்து. இந்தாளு மாட்டேன்னு சொல்லி தகர்த்துட்டார். சரி என்று அந்தப் பாடல்களையும் நானே பாடும்படி ஆகியது.
பாடலின் நடுவே சீரகமும் உப்பும் கலந்த பொடியினை அப்பப்போ மென்று கொண்டு இருந்தார் சுசீலாம்மா. எல்லா பாடல்களின் திருத்தங்களையும் குறித்துக் கொண்டு இரவு முழுவதும் உட்கார்ந்து திருத்தி தமிழில் மறுபடி டைப் செய்து அடுத்த நாள் எல்லாப் பாடல்களையும் ஜோஸ¤டன் உட்கார்ந்து சரி பார்த்து ப்ரிண்ட் செய்து sheet protectors போட்டு பாட வேண்டிய வரிசையில் வைத்து 3 folder களாக செய்து மேடை ஏறுமுன் அவர்களிடம் கொடுத்தேன். அவர்களுக்கு பரம சந்தோஷம். இவ்வாறாக கச்சேரி ஆரம்பித்தது.
No comments:
Post a Comment