Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Sydney  !!

Monday, September 05, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 9

மேடைக்கு வருமுன் இருவரின் ஆசியையும் குழுவினர் எல்லோரும் பெற்றோம். எல்லா பாடல்களும் sequencing முறையில் கையாளப் படுவது சுசிலாம்மாவிற்கு சற்றே புதிய அனுபவம் போலும். அடுத்த முறை கட்டாயம் பாடல்களை live ஆக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நானும் உறுதி அளித்தேன். கச்சேரி மாணிக்க வீணை பாடலோடு ஆரம்பமாகியது. மிக அழகாகப் பாட ஆரம்பித்தார். ஆனால் இது முன்னரே பதிவு செய்யப்பட்ட தாளகதி (timing) என்பதால் சற்றே தாளம் விலக, ஜோஸிடம் முன்னரேயே பதிவு செய்யப்பட்ட இசைக் கோர்வைகளை வாசிக்காது கையால் வாசிக்கும் படி சமிக்ஞை செய்தேன். interlude களுக்கு மட்டும் முன்னரே பதிவு செய்யப்பட்டதை வாசித்துவிட்டு மற்றதை எல்லாம் live ஆக வாசித்து சரியாக பொருத்தினார் அவர். பரதன் மற்றும் ப்ரணவ் இருவரும் துல்லியமாக கேட்டுக் கொண்டெ வாசித்து வந்தனர். 70 வயது பெண்மணியா பாடுவது என்ற மலைப்பைத் தந்த சுசீலாம்மாவிற்கு பார்வையாளர்கள் கைத்தட்டலுடன் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

அதற்கு அடுத்து ஆலய மணி பாடல் தொடர எல்லா வரிகளும் மிகச் சிறப்பாக பாடி முடித்தார். ஜமுனாம்மாவிற்கு பாடல்கள் கம்மி என்பதால், 3 சுசீலாம்மா பாடல்கள் நடுவே அவரது பாடல் வருமாறு வரிசை அமைத்து இருந்தேன். காளை வயசு பாடலை பாட ஜமுனாம்மாவை மேடைக்கு அழைத்தேன். அப்போது சுசீலாம்மா :

"ஜமுனா எனக்கும் senior (field ல்) முறையாக பார்த்தால் அவர் தான் முதலில் பாடவேண்டும். மாணிக்க வீணை இருப்பதால் நான் பாடும்படியாக ஆகிவிட்டது" என்று அழகாக முன்னுரை தந்தார். அதற்கு ஜமுனா "சுசீலாம்மா தான் இந்த கச்சேரிகளை எல்லாம் ஏற்பாடு செய்து பாட வாய்ப்பு கொடுத்தார். எனவே அவர் முதலில் பாடுவது சரியே ஆகும்" என்று கூறினார். காளை வயசு பாடலைப் பாட ஆரம்பித்தார். சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டன் எனப்து போல மைக் சற்று மக்கர் செய்து பின் சரியாகியது. பின்னர் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனிதே வர ஆரம்பித்தன.

சந்திரோதயம் பாடல் முதல் டூயட்டாக அமைந்தது. முந்தின இரவே சுசீலாம்மா என்னிடம் சொன்னார் : "முரளி..நீ எப்படி பாடணுமோ அப்படித் தான் பாடுறே, குரல் மட்டும் TMS சாரைப் போல் இல்லை" என்று. எனக்கு வேறு யாரும் திருப்திகரமாக அமையாததால் வேறு வழியின்றி அதனை பாடும் படி ஆகியது. பாடலின் முன்னே சுசீலாம்மா "சந்திரோதயம் பாடல் TMS சார் பாடினது. இவர் பாடும்போது அவரை நினைச்சுக்கோங்க என்றார்" நகைச்சுவையுடன். நான் "ஆமாம், அவரை நினைச்சுக்கிட்டு என்னை மன்னிச்சுடுங்க" என்று கூறி பாடலை ஆரம்பித்தோம். பாடவேண்டிய டூயட்டுகளில் "சந்திரோதயம்" மற்றும் "விழியே கதை எழுது" - இரண்டிலும் எக்கச்சக்க சங்கதிகள். 3 நாட்களாக பாடி பேசிப் பழகியதில் என் தொண்டையில் சரியான எரிச்சல். பயந்து கொண்டே பாட ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்தவரை, பெரிதாக தவறுகள் ஏதும் செய்யவில்லை. ஆனால் இரண்டிலுமே பயிற்சியின் போது அத்தனை சங்கதிகளையும் பாடி இருந்தாலும், மேடைக்கு வேண்டி சிறிய இலகுவான மாற்றங்களை செய்து (சில இடங்களில் மட்டும்) பாடினேன். நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் வந்தது "குங்கும பூவே". செம ஹிட். ஜோஸின் கிடார் வாசிப்புடன் ஆரம்பித்தது அந்தப் பாடல். ஜமுனாம்மாவுடன் சேர்ந்து சந்திரபாபுவின் குரலைப் போல மாற்றிப் பாடினேன். மக்கள் கைத்தட்டல் மூலமும், ஆடலின் மூலமும் மகிழ்ச்சியை அறிவித்தனர். பழுத்த கலைஞர்கள் என்பதால், பாடலின் இடைவெளிகளில் அவர்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக சுசீலாம்மாவிற்கும் ஜமுனாம்மாவிற்கும் ஒரு சோ·பா போடப் பட்டு இருந்தது. பாடி முடிந்து ஜமுனாம்மா சோ·பாவிற்குப் போகும் வேளையில் என கையை பிடித்து "முரளி, கலக்கிட்டே" என்றார்கள். நிறைவாக இருந்தது. அதனைத் தொடர்ந்து "காதல் சிறகை" போன்ற அழகான பாடல்களை சுசீலாம்மா பாடிக்கொண்டு வந்தார்கள். "காதல் சிறகை" பாட்டிற்கு பரதன் வெகு நேர்த்தியாக மிருதங்கம் வாசித்து மகிழ்வித்த்தார்.

பின்னர் சில டூயட்டுகள் வந்து போயின - அழகிய மிதிலை, ஆதி மனிதன், துயிலாத பெண். இதனைத் தொடர்ந்தது "பாட்டொன்று கேட்டென்". அஞ்சனாவும் ஸ்ரீதேவியும் chorus பாட ஜமுனாம்மாவின் இந்தப் பாடல் மிக அசத்தலாக அமைந்தது. ஜோஸ் கீபோர்டில் புகுந்து live ஆக பியானோ மீட்டித் தள்ளினார். ஜமுனாம்மாவிற்கு மிகுந்த நிறைவு. பார்வையாளர்களுக்கும் சந்தோஷம்.

நிகழ்ச்சியின் பாதியிலே வரும்படியாக "மாமா மாமா" வை அமைத்து இருந்தேன். நான் கணித்தது நல்லவேளையாக சரியாக இருந்தது. பிரணவும் பரதனும் தாளத்தை அடித்து தள்ள, ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஜமுனாம்மாவுடன் இணைந்து பாட, மற்ற எல்லோரும் chorus பாடி பாடல் ஒருவரையும் சீட்டில் உட்கார விடவில்லை. எல்லோரும் எழுந்து நின்று ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர். கணிப்பின் படியே பார்வையாளர்கள் வேண்டுகோளுக்கிணாங்க இந்த பாடல் கடைசியில் பின்னொரு முறை ஒலிக்கப்பட்டது. இரண்டாம் முறை பாடுகையில் ஜமுனாம்மாவுடன் நான் பாடினேன் .

பதினெட்டாவது பாடலாக அமைந்தது விழியே கதை எழுது. இந்தப் பாடல் பாட வரு முன், நேரமின்மை எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சுசில்லாம்மாவிடம் "அம்மா, விழியே பாடலாமா இல்லை முத்துமணி மாலை பாடலாமா" என்று கேட்டேன். "பழையதே பாடலாமே முரளி" என்றார். சரி என்று விழியே பாடலை ஆரம்பித்தேன். அத்தனை பாடல்களிலும் என் குரல் வாத்தியங்கள் இன்றி தனித்து ஒலிப்பதாக ஒரு பாடலும் இல்லை. ஆனால், விழியே பாடலில் முதலில் KJY அவர்கள் வாத்தியங்கள் இன்றி வெறுமே பல்லவியை ஒரு முறை தாளமிண்றி பாடுவதாக அமைந்திருக்கும். அதனை நான் பாட, பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஊக்குவித்தனர். அதனை கண்ட சுசிலாம்மா மகிழ்ந்து என்னை பார்த்து திரும்பி கைத்தட்டியது வாழ்வில் எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவு. ஒரு பெரிய சகாப்த்தின் வாழ்க்கையில் ஒரு சிறு மணித்துளி நானும் நடந்து சென்று இருக்கின்றேன் என்று நினைத்து பார்க்கையில் இப்போது கூட புல்லரிக்கிறது.

இந்தப் பாடல் முடிந்தவுடன், கலைஞர்களை கௌரவிக்க வேண்டி தமிழ் சங்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் மேடைக்கு வர சற்றே தாமதமாக, சுசீலாம்மா தன் மனம் போன போக்கில் ஒரு அழகான ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். ப்ரணவ் மற்றும் ஜோஸ் அதற்கு அழகு சேர்க்க என்னால் சும்மா இருக்க முடியவில்லை (பாடி பழகின வாயும்...). நானும் அவர்களுடன் சேர்ந்து பதில் ஆலாபனை போல் செய்ய சந்தோஷத்துடன் ஊக்குவித்தார். இது முடிந்து கலைஞர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப் பட, ஜோஸ் வந்த போது நான் மைக்கில் சொன்னேன் :

"அம்மா, இவர் எந்த கச்சேரிக்கும் இவ்வளவு உழைத்ததில்லை என்று கூறினார். இதற்கு உழைத்ததில் தனக்கு 20 வயது ஏறிப் போனதாக விளையாட்டாய் குறிப்பிட்டார். ஏன் தெரியுமா ? உங்களுக்கு இந்தியா போனவுடன் இவரது பழைய குருவான தேவராஜன் மாஸ்டருடன் கச்சேரி இருக்கிறதாம். எனவே நீங்கள் அவரை பார்க்கப் போகையில் நல்ல வார்த்தைகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து இருக்கிறார்" என்று கூற, ஜோஸ் சுசிலாம்மாவில் காலில் விழுந்து ஆசி வாங்கினார். சுசிலாம்மாவிற்கு அடக்க முடியாத சிரிப்பு.

இவ்வாறாக ஸ்ரீதேவி மேடைக்கு அழைக்கப்பட சுசீலாம்மா " நீ ஒரு பாடல் பாடிவிட்டு தான் செல்ல வேண்டும்" எனச் செல்லமாக பணித்தார். "காற்றினிலே வரும் கீதம்" பாடலை மனம் உருகும் வகையாகப் பாடிய ஸ்ரீதேவியை சுசீலாம்மா " மறைந்த அந்த அம்மா சுவர்க்கத்திலிருந்து உன்னை வாழ்த்துவாங்க. அவங்க இருக்கும்போதும் இறந்த பின்னும் தேவதை தாம்மா" என்று சொல்ல ஸ்ரீதேவி நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.

பின்னார் எல்லாரும் முடிந்தவுடன், சுசீலாம்மா மைக்கை எடுத்து "இன்னிக்கு கோகுலாஷ்டமி. எல்லாரும் என்கூட இந்தப் பாடலை சேர்ந்து பாடுங்கள்" என்று சொல்லி "பிருந்தாவனமும் நந்த குமாரனும்" பாட ஆரம்பித்தார். பார்வையாளர்கள் வெட்கப்பட்டு பாடாமல் போக ஆண் குரலுக்காக நான் சுசிலாம்மாவுடன் இணைந்து பாடினேன். இவ்வாறாக இனிதே முடிந்தது கச்சேரி. இதற்குப் பின் சுசிலாம்மாவை வீட்டில் சென்று ஒரு 15 நிமிடம் நேர்காணலுக்காக கண்டேன். அதை பற்றி அடுத்த பதிவில் எழுதிகிறேன்.