இரண்டு வருடங்களுக்கு முன்னே உதயாவிடமும் மற்ற நண்பர்களிடமும் இணையத்தில் அளவளாவிக் கொண்டிருந்த போது பாலியல் தொழிலாளிகள் பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. அவர்களுக்கு தேவதாசி என பெருமை செய்த காலத்தில், பாராளும் மன்னர் முதல் பாமரர் வரை காமக் கலையின் நுணுக்கங்களுக்காக அவர்களிடம் சென்று பயின்று வந்ததாக பல நூல்கள் கூறுவதுண்டு. அவர்களுக்குச் சமுதாயத்தில், அத்தொழிலுக்கென்ற ஒரு மதிப்பு வழங்கப் பட்டு இருந்தது.
அவர்கள் விரும்பி அத்தொழிலை ஏற்றுக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள் என்றாலும் அவர்களை நாயினும் கீழ் சாதியென நடத்துகின்ற விதம் போகப் போகத்தான் உருவானது. ஒரு ஆணாதிக்கச் சமுதாயத்தில் மெல்லியலாரின் கூக்குரல்கள் குறுகித் தேய்ந்து அழிந்து போய் விட்டன. அவர்களின் இன்றைய நிலமையோ கேட்கவே வேண்டாம். உடலை சிதைக்கின்ற உயிர்க்கொல்லி வியாதிகள் ஒரு புறம். மனதை வதைக்கின்ற மனிதர்கள் மறுபுறம். ஓரு பெண் இத்தொழிலுக்கு வருவாளேயானால் அவள் சந்தர்ப்ப வசத்தால் எவ்வளவு இழந்து இருப்பாள் என்று சிந்தித்துப் பாருங்கள் ?! எத்தனை வலிகளைத் தாங்கிக் கொண்டு வந்து இருப்பாள் ?! அவள் அளிக்கும் உடலின்பத்திற்கு பதிலாக அவளுக்கு கிடைப்பதெல்லாம் உடல், மன வேதனை மற்றும் சிறிதளவு பணம். அவ்வளவு தான்.
எங்கள் உரையாடலின் போது என்னுள் ஒரு எண்ணம் எழுந்தது. ஒரு வேசி தன் நிலைமையைப் பாடி தனக்கும் சமுதாயத்தில் மதிப்பு கேட்பது போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி ஒரு கற்பனையில் தோன்றியவை தான் வரப்போகும் இந்த 6 பாடல்கள். அதில் முதல் பாடலை உங்களுக்கு தருகிறேன்.
இந்தப் பாடலும் மற்ற வரும் பாடல்களும் ஒரு வேசிப்பெண் பாடுவதாக அமைந்துள்ளது
சிற்றாளும் பேராளும் ஒன்றே இங்கு
சிறிதேனும் முகம்கோணி நில்லோம் என்றும்.
பொற்றாரை பொழிகின்ற மாந்தர்க்கெல்லாம்
பொழுதென்ன இரவென்ன? இன்பம் உண்டு.
கற்றாரை கற்றாரே காமுறுவாராம்
கல்வியது இல்லாதார் செல்வார் எங்கு ?
உற்றாராய் அவரையுமே போற்றி நாங்கள்
உடலின்பம் உளமின்பம் இரண்டும் தந்தோம்
பொருள்:
எங்களுக்கு உடலிலோ குணாத்திலோ வேறு எதிலும் சரி சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லை. என்றும் நாங்கள் எவரைப் பார்த்தும் முகம் கோணி நிற்க மாட்டோம். பொன்னை தாரையாக (மழையாக) பொழிகின்ற மனிதருக்கெல்லாம் (பகல்)பொழுதா இரவா என்று எல்லாம் பார்க்காமல் இன்பம் தருகிறோம். (காமக் கலை) கற்றவர்களுக்கு கற்றவர்களை மட்டுமே பிடிக்குமாம். ஆனால் கல்வி அறிவு இல்லாதவர் எங்கு போவார் ? அவர்களையும் உற்றவராய் நினைத்து நாங்கள் உடலுக்கும் மனதுக்கும் இன்பம் அளிக்கிறோம்.
(தொடரும்)