பாரதியாரை மேற்கோள் காட்டி "தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று சொல்கிற 100 தமிழர்களில் 90 பேருக்கு தமிழே சரியாகத் தெரியாது. தன் மொழியையே நன்றாகப் படித்து அறியாமல், அதன் செவ்வியலின் நுட்பமோ, அல்லது நவீன கால இலக்கியத்தின் வாடையோ படாது, மொழி பற்றிய எந்தப் புரிதலும் இல்லாது வெற்றுப் பெருமை பேசுகிற தற்குறிகள் தான் இப்போது நிறைய கிடைக்கின்றனர்.
அந்த மேற்கோளில் பாரதியின் முக்கியமான வார்த்தைகள் "யாம் அறிந்த". பாரதியாருக்குப் பல மொழிகள் தெரிந்து அவற்றில் புலமையும் இருந்தது. அவற்றை எல்லாம் கற்ற பின், தமிழின் அழகியலோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் அதை ஒரு கவிவடிவாய் உரைத்தார்.
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்" என்று சொன்னதை செய்து காட்டியவர். தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்தவர் பாரதி.
பாரதியைப் போற்ற வேண்டும் என்றால், முதலில் அவர் வழி நின்று பல மொழிகளைக் கற்று அவற்றின் இலக்கியத்தைப் பருக வேண்டும். மொழியமுதம் பருகாத முழுமுதல் முட்டாள்களை ஒதுக்க வெண்டும். உருதுவிலிம், ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் கவித்துவம் கொண்ட காவியங்கள் பல படித்து அதனால் விளைகின்ற உள்ளக் கிளர்ச்சியில் மேலும் நூல்கள் எழுதவேண்டும்
வடமொழி அறியாமலா கம்பன் காவியம் படைத்தான் ? அவன் வடமொழியிலும் வித்தகன். அதை படித்து வந்த உவகை ஊற்றில் தமிழில் காவியமாய் வரைந்தான்.
வேற்று மொழி பேசும் சக மனித மேதைகளைக் கொண்டாடாமல் இன்னும் கற்காலவாசிகளாய் தன் மொழியையும் வளர்க்காமல் பிறமொழியையும் படிக்காமல் இருக்கின்ற பாசாங்கு மொழிப் பெருமையாளர்களைப் புறந்தள்ள வேண்டும்.
இல்லை என்றால் "தமிழன் டா.. தமிழ் டா.." என்ற வெற்றுக் கூச்சல் தான் மிஞ்சும்
No comments:
Post a Comment