திடீரென்று ஒரு நாள் "பிரதோஷம் என்பது சிவன் ஆடும் நாள்" என்று யாரோ ஒருவர் சொன்னார். அதுபோக எல்லாதேவர்களும் கயிலாய மலையில் போய் நடனம் காண்பதாகவும் சொன்னார். அப்போது தோன்றியது ஒரு கற்பனை - மனிதர்கள் மட்டும் என்ன குறைந்து போய்விட்டனர் ? படைப்பில் எல்லாரும் ஒன்று தானே ? அப்படி என்றால் மனிதருக்கு மட்டும் ஏன் நடனம் பார்க்க கிடைக்க மாட்டேன் என்கிறது ? எனவே ஒரு மனித பக்தன் உரிமையோடு சிவனை மிரட்டுவது போல் இந்தப் பாட்டை அமைத்திருக்கிறேன். இதனை ஷண்முகப்ரிய ராகத்தில் மெட்டமைத்து இருக்கிறேன்.
பல்லவி:
=====
நடனம் நான் காண வேண்டும்
நடராஜனின் நடனம் நான் காண வேண்டும்
சரணம் 1:
=========
எகாந்தமாய் இருந்து பிரதோஷ நாளினில்
தவமும் கலைத்து நடம் புரிகின்றவன்
கிரகங்கள் துதி பாட கணம் கோடி லயித்தாட
கயிலாய மலையில் இடம் தருகின்றவன்
தானாடும் அழகினையே தவம் செய்தும் மாந்தர்க்கு
காணாது செய்து அடம் புரிகின்றவன்
ஊனோடு பிறந்திட்ட ஒருகுற்றமல்லாது
குறையில்லை எமக்கென்று அறியாதவன்
நாவிருந்து புகழ்பாடும் வல்லமையை மனிதருக்கே
நல்கியவன் இதை நினையாதவன்
சரணம் 2:
=========
ஊழியிலும் அழியாது ஓம்காரப் பொருளாகி
ஒருகுவளை நெருப்போடு ஆடும் சிவன்
ஆழியிலும் நீரெல்லாம் ஆவியாய் மாறியும்
அணையாத தாகமொடு வாடும் சிவன்
உன்னடனம் நான்காண வேண்டுமென பலமுறைகள்
உரிமையிலும் கேட்டிடினும் கேளா சிவன்
உன்னீல கண்டத்தின் உள்ளார்ந்த நஞ்சுண்டு
உயிரினை உறுதியுடன் மாய்ப்பான் இவன்
உடலினை யோகத்தில் காய்ப்பான் இவன்
No comments:
Post a Comment