கம்பன் விழாவில் “பேசாப் பொருளான சூடாமணி பேசினால் ?” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நான் வாசித்த கவிதைகள் .
=====
உம்பர்காள் ! உம்மீதே நம்பிக் கை-இல் !
உயர்வான செந்தமிழின் தாள்கள் மற்றும்
கம்பர்தாள் கள்பற்றிப் புண்ணிய னானேன் !
கவியாகச் சிலவரிகள் கழலில் வைப்பேன் !
அரங்கத்தே அமர்ந்துள்ள சான்றோர் எல்லாம்
பெருமனதாய் என்னுளறல் கேட்டே உள்ளம்
இரங்கத்தே வைகாண்பீர் விண்ணப் பத்தை
வினயமுடன் வைக்கின்றேன் தலையும் தாழ்த்தி !
கணையாழி கம்பனவன் கதையில் எதும்
கூறாதுபோ தாமோ என்றே கேள்விக்
கணைஏற்றிக் கேட்டுள்ளார் விடையாய் நானும்
கவிபோன்று உருமாற்றி முயற்சிக் கின்றேன்.
கணையாழி கம்பனவன் கதையில், ஐயா !
இருபோது வருகிறது அனுமன் மூலம்
மனையாளின் துயர்நீக்க முன்னே போகும்
மால்தம்பி உயிர்காக்கப் பின்னே போகும்
======
அனுமன் கடலைத் தாண்டி சீதையை அடைந்து அசோக வனத்தில் அழகான பெண்டிர் சூழ காவலில் வைக்கப் பட்டுள்ள சீதையைக் காண்கிறான்.
அத்தரைப் பூசிய அழகியர் நடுவே
நித்திரை இன்றியே கார்குழல் நீக்கிச்
சித்திரைத் திங்கள் உதிப்பது போலே
பத்தரை மாற்றுப் பத்தினி கண்டான்
மட்டரை போந்தே ராமனின் பெயரில்
முத்திரை மோதிரம் சட்டென இட்டான்
”அத்திரை கடலினைத் தாண்டியே வந்தேன்
அனுமனாம் ராமனின் அடியவன்” என்பான்
”கட்டளை இட்டால் அன்னையே உம்மவர்
கையிலே சேர்ப்பனே” ! கைதொழல் செய்வான் !
கட்டவிழ்ந்தோடிடும் ஆறுபோல் காரிகை
காய்ந்த மனவெளி ஊற்றுகள் காணவே !
மட்டிலா மகிழ்வொடு மாதவள் ராமனின்
மணியினை மார்பொடு சேர்ப்பனள் ! காலமே
தொட்டிலா அழகொளிர் தேகமும் கொண்டவள்
தூயவன் அணியினை நோக்கியே கூறுவள் !
சீதை கணையாழியை நோக்கிக் கூறுவாள்:
”ஓகணை யாழியே ! உன்விதி இம்மடப்
பேதையின் விதியென ஆனதோ ! என்போல்
பிறிதொரு ஆடவர் கைபட வந்தனள்
மன்னவன் விரலையே நீங்கினள் மாசினள் !”
===
அந்தக் கணையாழியில் ஒரு செம்மை படர்ந்து இருப்பதைப் பார்க்கிறாள். துணுக்குறுகிறாள். இந்தச் செம்மை இந்தக் கணையாழியின் மேல் எப்படி வந்தது என வினவுகிறாள் கணையாழியிடமே !
===
”கல்லிலும் முள்ளிலும் காய்ந்தவர் நாணுடை
வில்லினைப் பூட்டியே வாழ்பவர் உண்மையின்
சொல்லுடை நாயகர் சிந்திய குருதியும்
உன்னிடை வந்ததோ உரைத்திடு சீக்கிரம் !
உதிரமா ? இல்லை பிறிதொரு மாதின்
அதரமா ? அதனின் சாந்தா ? நெற்றிக்
குங்குமமா எனக் குழம்புகி றேன் !மிக
மங்குதுமா இவள் மீதுள காதலே !
ஊடலும் கூடலும் கண்டவளே ! எனைத்
தேடலும் செய்பவர் வானரனா ? அவர்
சேடனைத் தூதென அனுப்பியதை- ஒரு
கேடெனவா இல்லை சூதெனவா ?”
கணையாழி சொல்கிறது:
==================
”சோக வனத்தைச் சுந்தரமாக்கி-அ
சோக வனமெனப் பெயர் தந்தவளே !
மோக வேட்கையில் மூழ்கியே மாதரைப்
போக வேட்டையில் புணர்ந்திலன் நம்மவன் !
நின்னையே நெஞ்சினில் நிறுத்தியவன் நித்தம்
நித்திரை நேரம் வந்த பின்னே
தன்னையே நீருகு நேத்திரமாய்ப் பிறர்
காண்பதும் அழகிலைஎன்று தம்கை
கொண்டதை துடைப்பவன் ! இங்கனமே -பல
முறைகளும் செய்திடக் கண்ணிமைகள்
விண்டதே பாருமே எம்முரசலால் துளி
வந்ததே குருதியும் கண்ணகத்தே !
உதிரமும் என்னுடல் பட்டிடச் சட்டென
உறைந்திடச் செம்மையும் சேர்ந்தது காண் !
அதரமல்ல! அதன் சாந்துமல்ல ! அவன்
அழுதிடத் தோன்றிய குருதியம்மா !
====
இப்படி உன்னையே நினைத்துப் புலம்பும் இராமன் தூயவன். கணையாழி மேலும் சொல்கிறது
====
உன்னவன் தூயவன் உன்னையே எண்ணியே
விம்மவன் மீதுஏன் சாடுகின்றாய் ?
தென்னவன் மீதுள ஆத்திரம் யாவுமே
தூயவன் மீதுஏன் காட்டுகின்றாய் ?
வானரன் அல்லனீ அனுமனுமே - பலர்
வாழ்த்திட வாழ்பவன் ஐயமில்லை !
வான்நரன் பலருமே வணங்கிடு மாண்புள
வன்!வலி மிக்கோன் பண்பினுரு."
அதிர்ந்து எழுவளே அன்னமும்! மயக்கமும்
தெளிந்து எழுபவள் சொல்லிடுவாள்
அதாவது அனுமன் கணையாழியைக் கொடுத்தவுடன் அந்த அதிர்ச்சியில் மயங்கிப் போனவளின் கனவாகத் தான் இந்த உரையாடலை நான் இங்கே தந்திருக்கிறேன். இப்போது அம்மயக்கத்தினின்றும் தெளிந்து அவள் அனுமனைப் பார்த்துச் சொல்லுவாள்.
”நாழி தாழ்த்திடா(து) ராஜன் கணையென
ஆழி தாண்டியே என்னவர் தம்கணை
யாழி எம்கையில் சேர்த்துக் காத்தனை
வாழி வாழிய அருமை அனுமனே !”
நன்றி! வணக்கம் !
No comments:
Post a Comment