1998. படிக்க அமேரிக்கா சென்று இருந்த நேரம். எனக்கென்று வாய்த்த சக அறைவாசிகள் (அதாங்க room-mates) ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசு. ஒருவன் கூட்டி வைத்த குப்பைக்கூளங்களைக் கூடையில் போடாமல் அப்படியே வைத்து விட்டு தன்னிலை மறந்து பொழிகின்ற பனியோடு பேசுபவன். மற்றொருவன் இளையராஜா இசையை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அலசி இணையத்தில் போய்க் கதைத்து சண்டையும் போடுபவன்.
மற்றொருவன் மிகவும் வித்தியாசமானவன். அவன் சமையலை குழந்தை சாப்பிட்டால் கூட “ரொம்ப சப்புன்னு இருக்கே” என்று முகம் சுழிக்கும் அளவுக்கு சுமாராக சமைப்பவன். அதோடு காகிதச்சுருள்களை மிகுதியாக இட்டு பாதாள கங்கையை ”சிரம பரிகாரம்” செய்யும் வேளையில் பல தடவை பெருக்கெடுக்க வைத்து அது வீடு முழுக்க விரிக்கப் பட்டு இருக்கும் தரைவிரிப்புகளை நனைத்து 1 வாரம் நிற்க நடக்க முடியாமல் செய்ய வைத்த புண்ணியவான்.
ஆனால் அவனிடம் ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவனிடம் ஒரு மிகப் பிரபல தமிழ் நாட்டு கர்னாடக சங்கீத வித்துவானுடைய பஞ்ச இரத்தின கீர்த்தனைகள் “கோஷ்டி கோவிந்தம்” முறையில் பாடப்பட்டு இருந்தது. எனக்கு அந்த வித்துவான் மேலே அவ்வளவு பெரிய ஈடுபாடு இல்லை. அந்த ஒலிநாடாவை தினமும் திரும்பத் திரும்ப போட்டு கேட்டு என்னையும் மற்றவரையும் எரிச்சலடைய வைத்தான். ஆனாலும் திரும்பத் திரும்பக் கேட்டதால் எனக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் மீது ஈர்ப்பு அதிகமாகியது. அதிலே முதலாவதான
“எந்தரோமா……….ஹானுபாவுலு”
வின் மெட்டு மிகவும் பிடித்துப் போயிருந்து. அதிலே ஒரு வரி:
“பா.. கவதரா…மாயண…..கீதா”
என்று வரும். மிகவும் கம்பீரமான ஒரு மெட்டு அது. தெலுங்கு மொழியில் சுத்தமாகப் பயிற்சி இல்லாததால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் கூகுள் கூட இல்லை. எனவே பாடல் வரிகள் எல்லாம் வேறு எங்கேயாவது தான் தேடிப்பிடிக்க வேண்டியதாக இருந்தது. இது கிடைக்கவே இல்லை. எனவே நெட்டுருப் போட்டு அங்கே இங்கே பாடிக் கொண்டு இருந்தேன்.. ஒரு நாள் இன்னொரு நண்பரின் வண்டியில் பயணப் பட நேர்ந்த போது அதே 5 கிருதிகளை திரு பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்டேன்.
“பாகவத ராமாயண கீதா”
என்று பாடினார். அப்போதுதான் புரிந்தது என் முட்டாள்தனம். ”எந்த ரோமா” இல்லை “எந்தரோ மஹானுபாவுலு” என்று தியாகைய்யர் பாடிப் பெரியவர்களைக் கவுரவித்து இருக்கிறார் என்று புரிந்தது. தெலுங்கு அறியாமல் தவறாகப் பாடிய ஒருவர் மூலமாக பிழைபட்ட வரிகளைக் கற்று வைத்திருந்தேன். அன்று தான் ஒரு கர்நாடக சங்கீதப் பாடலுக்கு வரிகள் தெளிவாக இருத்தல் எவ்வளவு அவசியம் என்று புரிந்தது. அன்று முதல் பாலமுரளி அவர்களின் பாடல்கள் எனக்கு பல வகுப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றன..அந்தக் குருவிற்கு இச்சிறியோனின் வந்தனங்கள்.