கல்லூரிக் காலத்தில் காதல் கவிதை எழுதுவது என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம். நான் என்ன விதிவிலக்கான John Nash ஆ ? தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரிகளில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையனை தேர்ந்தெடுத்து அவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அதில் எண்பது சதவிகிதம் என்னோடு பொருந்தும் என்று தோன்றுகிறது.இந்தக் கவிதைக்கு ஒரு கதை இருக்கின்றது. கல்லூரிக் காலத்தில் இளமை செய்த இம்சையில் இன்னொரு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு சொல்ல வேண்டியதை மடலாகத் தீட்டிய (து) (ஒரு மடத்தனம் ?) தான் இது. நான் அந்தப் பெண்ணை பள்ளிக் காலத்திலிருந்த்து "காதல்" செய்து கொண்டிருந்தேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எந்தப் பெண் இது போன்ற ஒரு மடலை எடுத்துகொண்டு தன்னைத் தருவாள் என்று சிரிப்பு வருகின்றது. ஒரு பொய்யான ஆசிரியப்பா வடிவில் ஒரு கவிதையினை எழுதி ஒரு பெண்ணிடம் கொடுத்து அதனை அவள் ஏற்றுக் கொள்வாளா என மனது லப்டப் என் அடிக்கும் படியாக வாழ்ந்த நாட்கள்..கல்லூரியிலிரிந்து வீடு வந்து கொண்டிருக்கும்போது பிரயாணத்தில் இரவு நேரத்தில் தோன்றிய கவிதை இது. வந்து தந்தையிடம் வாசித்து காட்டினேன். அவருக்கு நான் கவிதை எழுதுவேன் என்று தெரியும். என்றுமில்லாமல் அன்று "டேய்..இது சும்மா எழுதினியா இல்லை யாரையாவது நெனச்சு எழுதினியா ?" என்று சிரித்துகொண்டே கேட்டார். மழுப்பினேன். பின்னர் கல்லூரி சென்று அதனை அனுப்பியும் வைத்தேன் - "தயவு செய்து உன் தந்தையிடம் இதனை காட்டி விடாதே " - என்ற பின்குறிப்புடன். (அனுப்பும் முன்னே அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு பிள்ளையார் கோவிலை சுற்றியது இன்னொரு மடத்தனம் ). டேட்டிங் யுகத்தில் காலத்தினால் சிதைந்து கொண்டு இருந்த தமிழும், காதல் என்றால் என்னவென்று தெரியாது கையில் பேனாவை எடுத்து கவிதை தீட்டிய என் மனமும் முதிர்ச்சியும், அய்யோ தந்தையிடம் சொல்லி விடாதே என்று நான் வைத்த ஒரு கோழைத்தனமான கோரிக்கையும் அவளை சுட்டிருக்க வேண்டும். விளைவு - நிராகரிப்பு :-)சேரனின் autograph படம் பார்த்தபின் அப்போது எழுதிய இந்தக் கவிதை ஞாபகம் வந்தது. இப்போது அந்தப் பெண் நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு வசதியாக இருக்கிறார். நானும் பல பேரிடம் குழப்ப உறவுகள் பூண்டு இன்னும் வாழ்க்கைப் பாதையில் ஒளி தேடிக் கொண்டு இருக்கிறேன். சேரனின் படம் சொல்வது போல இந்த நினைவுகள் அழியாது. சுகமான நினைவுகள். எனக்கு இது போல் காதலில் விழுந்து எழுவதில் எந்த வருத்தமும் இல்லை. மாறாக இது போன்ற நிகழ்வினைத் திரும்பிப் பார்க்கும்போது திண்ணையில் விளையாடும் தென்றல் சற்றே மயிலிறகால் மனதை நீவி விட்டு உறக்கத்தில் ஆழ்த்தி விட்ட ஒரு சுகம் தான் தெரிகிறது. அது போக, இப்படி எல்லாம் வாழ்க்கையில் கால கட்டங்கள் இருந்ததா ? என்று வியந்து சந்தோஷப் பட்டு பார்க்கும் அவ்வினாடி சுகம் கோடி பெறும். மன முதிர்ச்சிப் பாதையில் இவைகள் மைல்கற்கள். இதோ அந்தக் கவிதை:
====================================================
உள்ளமது தேக்கிவைத்த எண்ணமெல்லாம்
உன்முன்னே உரியபடி வைக்க எண்ணி
வெள்ளமெனப் பாய்ந்திட்ட உணர்வுக்கெல்லாம்
வைத்திட்ட வடிவமிது ! எந்தன் கூற்றில்
எள்ளளவேன் கடுகளவேன் அணுவளவும் ஏன் ?
அணுவிற்கோர் துகளிருந்தால் அதனின் அளவும்
கள்ளமிலை காரிகையே காதல் உந்தன்
கண்முன்னே கடிதமென வைத்தேன் ! காணாய் !
சிந்தித்து வரைவதுவோ கவிதை ? அன்றேல் !
சித்திரமாய் என்கனவில் நாளும் உன்னைச்
சந்தித்து வரைகின்ற மடலை நீயும்
சட்டென்று நீக்கிடுதல் வேண்டாம் கண்ணே !
நிந்தித்து நீயென்னை நீங்கிட்டாலும்
நினைவுகளில் என்றும்நான் உன்னைத் தேக்கி
வந்தித்து வாழ்ந்திடுவேன்! வையேன் என்றும் !
வன்சொற்கள் என்னகரா தியிலே இல்லை.
மடலிதனைக் கண்டவுடன் மங்கை நீயும்
மனதிலெழும் சினம்நீக்கிச் சற்றே நிற்க !
உடலீர்ப்பால் உரைக்கின்றேன் என்றெண்ணாதே !
உள்ளந்தான் உழல்கிறது உண்மை பெண்ணே!
கடலனைய உலகத்தில் கவின்மிகு பெண்டிர்
கணக்கின்றிக் கண்டுள்ளேன் ! ஆனால் உள்ளத்
திடலென்று வருங்காலை உன்னைஅல்லால்
ஒருவளையும் நினைத்ததிலை உண்மை இஃதே !
காதலினால் கவிதைநான் வரைகின்றேனா ?
கண்ணுக்குள் உனைவைத்துக் கரைகின்றேனா ?
கனவினிலும் உனைக்காண விழைகின்றேனா ?
கவிதையிலும் உன்னழகை வடிக்கின்றேனா ?
காற்றினிலே ஓவியம்நான் செய்கின்றேனா ?
கடல்நீரில் உன்பெயரைப் பொறிக்கின்றேனா ?
மோனத்தில் உள்ளேன்!என் அன்பே உந்தன்
மோகத்தில் உள்ளேன்!நீ பகராய் பாவாய்.
செந்தமிழோ ஆங்கிலமோ எம்மொழியும் உன்
சிந்தனையில் நான்மூழ்கும் வேளைதருகும்
சந்தமதைக் கவிதையெனச் சொன்னார் நண்பர்
சத்தமிலா நகைஒன்று தந்தேன் நானே !
பந்தமெதோ நம்மிருவர் இடையே என்று
பண்புடனே கேட்கின்றேன் ! அன்பே உந்தன்
சிந்தனையின் சாலையிலே நானும் உண்டோ ?
சீக்கிரமே விடைஎழுதி விடுவாய் நீயே.
காதலெனும் உணர்வாலே உந்தப் பட்டு
கோர்த்திட்ட கடிதமிது ! பதிலை நானும்
ஆவலுடன் பார்க்கின்றேன் அதிலே என்னை
அணைத்திட்டால் என்வாழ்வில் இன்பம் பொங்கும்
அறைந்திட்டால் என்றென்றும் துன்பம் தங்கும்
well written and very expressive.. puriyadha.. romba thooya thamizh illama.. arumaiyana nadai...
ReplyDeletenee menn melum kavidai ezhutha thaaano..
niragarithaaal undan kannul urandha..devadhai????
tata
sukku