அன்புருவாய் நுகர்வோரை என்றும் நோக்கி
அலுத்தாலும் கனிவதனை கண்ணில் தேக்கி
இன்புறுவீர் இவ்வுடலின் மீதே என்று
இன்முகமும் செய்துஇதழ் அமுதம் தந்தால்
பண்பறவே இல்லாமல் பாய்ந்தே எம்மை
பரிவோடு நுகராது புலியாய்ச் சீறி
வன்புணரல் செய்தெங்கள் வலியை ஏற்றும்
வாலிபரே விலங்கிற்கோ பிறந்தீர் நீரே ?
பொருள்:
நுகர்வோரை (customers) அன்பே உருவாகப் பார்ப்போம். எங்கள் வேலையை அலுத்தாலும் கனிவைக் கண்களில் காட்டுகிறோம். எங்கள் உடலின் மீது இன்பம் அடைவீர் என்று சிரித்து இதழ்களால் அமுதத்தை வார்க்கிறோம். ஆனால் பண்பு சிறிதும் இல்லாத வாலிபர்களே ! பரிவோடு, மென்மையாக மலர் போல எம்மை கையாண்டு நுகராமல் (smell the fragrance) புலி போல பாய்ந்து எங்களுடன் வன்புணார்ச்சி வைத்துக் கொள்ளுகிறீர்களே ! நீங்கள் என்ன விலங்கிற்கா பிறந்தீர் ?
(8)
எல்லுருகும் நோய்களெலாம் எம்மை அண்டும்
எனவே நாம் கவனமுடன் செய்தல் வேண்டும்
சொல்லியிதை வைத்தாலும் கேளார் மக்கள்
சுமையாக நோய்களையே சுமத்திப் போவார்
வில்லியென பின்னரெமை ஆக்கி வைப்பார்
வெம்பிடுமே மனதோடு உடலும் நாளும்.
கல்லுருகும் எம்கதையை கேட்டால் ஆனால்
கனியாமல் போவதுமேன் உலகார் நெஞ்சம் ?
பொருள்:
எலும்பை உருக்கும் நோய்களெல்லாம் எங்களை அண்டக்கூடும். எனவே ஐயா, நாம் பாதுகாப்புடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலமுறை விண்ணப்பித்துச் சொன்னாலும் எம்மை அண்டி வருவோரில் பலர் காது கொடுத்து கேட்க மாட்டார். பாதுகாப்பற்ற முறையால் பல நோய்களை எமக்குச் சுமையாக தந்து விட்டு போகிறார். ஆனால் எங்களைத் தான் வில்லியாகப் பின்னர் சொல்வார்கள். என்னவோ நாங்கள் மட்டும் தான் இதற்குக் காரணம் போன்று. நோயால் உடல் வெம்பும். ஊர் வாயால் உள்ளம் வெம்பும். எங்கள் கதையைக் கேட்டால் கல் கூட உருகிடும். ஆனால் சமுதாயத்தின் மனது மட்டும் இளக மாட்டேன் என்கிறதே ?
No comments:
Post a Comment